யாழ்ப்பாணத்தில் ஆங்கில மருத்துவத்தின் வெற்றிக்கு வித்திட்ட மருத்துவர் கிறீன் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
Description
கடந்த நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத் தமிழர்களின் மனங்களை வெற்றி கொண்ட அந்நிய தேசத்தவர்கள் பலர் இருந்தார்கள்; யாழ்ப்பாணத்திலே வாழ்ந்து தன்னலமற்ற பணியாற்றி தமிழர்களின் மனதிலே இடம்பிடித்த மருத்துவத்துடன் தொடர்புடைய மறைந்துபோன இருவரை இங்கே மீள நினைவூட்டுகின்றேன். ஒருவர், வடமாகாணம் என்று அழைக்கப்பட்ட அன்றைய யாழ்ப்பாண பிராந்தியத்தின் பிரித்தானிய குடியேற்ற நாட்டுப் பிரிதிநிதி, சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக். மற்றையவர், மருத்துவர் கிறீன். டைக் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் (01.10.1829 - 09.10.1867) கடமையாற்றிவர்.
இவரே யாழ். போதனா மருத்துவமனையின் தாபகர். டைக், யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்த அரச அதிகாரிகளில் ஒருவர். தனது சொந்த வருமானத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி இன்று பழைய பூங்கா என்று அழைக்கப்படும் காணியில் மரங்களை நாட்டி, வளர்த்து யாழ். நகரத்தில் ஒரு பூங்காவை உருவாக்கியவர். அதனை யாழ்ப்பாண மக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக தனக்குப் பின்னரும் எவரும் அதனை மீள உரிமைகோராத வண்ணம் விக்ரோரியா மகாராணியாரிடமிருந்து விசேட உறுதியையும் பெற்றிருந்தார்.
1847 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 6ஆம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்த மருத்துவர் கிறீன் வல்வெட்டித்துறையில் வசித்த வண. கோப் பாதிரியாரது இல்லத்தில் ஓரிரவு தங்கி 1847 ஒக்டோபர் 8 ஆம் திகதி வட்டுக்கோட்டையைச் சென்றடைந்தார். அடுத்தநாளே தமிழ் படிக்க ஓர் ஆசிரியரையும் அமர்த்திக் கொண்டார். ஓர் ஆண்டு காலத்துள் தமிழில் சொற்பொழிவாற்றவல்ல தமிழ்ப்புலமையாளராக வேண்டும் என்பதை கிறீன் இலக்காகக் கொண்டிருந்தார். அதே நேரம் வட்டுக்கோட்டையிலே சிறு டிஸ்பென்சரி ஒன்றை நிறுவி நோயாளர்களைப் பார்வையிடவும் ஆரம்பித்தார்
1847 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி நோயாளர் ஒருவரைப் பார்வையிடுமாறு கிறீனுக்கு அழைப்பு வந்தது. அடுத்து நிகழ்ந்தவை, யாழ்ப்பாணத்தில் கிறீன் மேற்கொண்ட முதலாவது சத்திர சிகிச்சை, கிறீனை உலகப் புகழ்பெற வைக்கும் என்று கிறீனும் கிறீனை யாழ்ப்பாணத் தமிழர்கள் கடவுளின் தூதுவர் என்று கருதி வியப்பார்கள் என்று அமெரிக்க மிசனரிகளும் நினைத்திருக்கவில்லை.
#SamuelFiskGreen #greenmemorialhospital #ABCFM #scudderfamily #TheScudderAssociationFoundation #firstmedicalmissionary #missionaries #missionaryjaffna #Vellore #MCMWorldwide